இனிமேல் விரும்பிய சேனல்களை காணலாம்…!!
விரும்பிய சேனல்களை மட்டும் பார்க்கும் டிராயின் புதிய நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
டிவியை ஆன் செய்ததுமே எக்கச்சக்கமா டிவி சேனல்கள் கொட்டிக்கிடக்கும். தமிழில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான சேனல்கள் இருக்கின்றன. அனைத்துமே விருப்பமான சேனல்கள் என்றால் கேள்விக் குறிதான். தேவைப்படாத சில சேனல்களுக்கு சேர்த்து வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். பேக்கேஜ் அடிப்படையில் டிடிஎச் நிறுவனங்களும் சேனல்களை திணிக்கின்றன. இந்த நடைமுறையை தடுக்கும் வகையில் மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான டிராய் புதிய விதிகளை வகுத்துள்ளது. ஆதாவது விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்ப்பது.
விரும்பிய சேனல்களை பார்க்க குறைந்தபட்ச அடிப்படை கட்டணமாக, வரிகள் சேர்த்து 153 ரூபாய் 40 காசுகள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் 100 சேனல்களை பார்க்கலாம். இந்த 100 சேனல்கள் இலவச சேனல்களாகவோ, கட்டண சேனல்களாகவோ இருக்கலாம். எச்டி சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது. பொதுத்துறை நிறுவனமான தூர்தர்ஷனின் 25 சேனல்கள் இந்த பட்டியலில் கட்டாயமாக வரும். மீதமுள்ள 75 சேனல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். 100 சேனல்களுக்கு மேல் தேர்வு செய்தால் கூடுதலாக சேவை கட்டணம் வசூலிக்கப்படும். தலா 25 சேனல்களுக்கு 20 ரூபாய் கூடுதல் சேவை கட்டணமாக இருக்கும். தேர்வு செய்யப்படும் சேனல் கட்டண சேனலாக இருந்தால், குறிப்பிட்ட சேனலின் கட்டணமும் இதனுடன் சேர்ந்துவிடும்.
டிடிஎச் நிறுவனங்களின் இணையதளங்களில் புதிய நடைமுறைகள் பற்றி விரிவாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இலவச சேனல்கள் எத்தனை, கட்டண சேனல்களில் விலைப் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. ஒரே நிறுவனத்தில் உள்ள பல சேனல்களை மொத்தமாக தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு ஸ்டார் நிறுவனத்தை தேர்வு செய்தால், அந்த குழுமத்தில் உள்ள பல்வேறு சேனல்களை பார்த்துக் கொள்ள முடியும். இந்த பேக்கேஜ் சேவையின் விலை ஒவ்வொரு டிடிஎச் நிறுவனங்களுக்கும் மாறுபடும். ஒரு எச்டி சேனலை தேர்வு செய்தால், இரண்டு சாதாரண சேனல்களை தேர்வு செய்த எண்ணிக்கையாக கருதப்படும். அதன் விலை பட்டியலும் அந்தந்த டிடிஎச் நிறுவனங்களில் வேறுபட்டு இருக்கும்.
கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு, அந்தந்த கேபிள் ஆபரேட்டர்கள் சேனல்கள் விலை பட்டியல் அடங்கிய விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். விரும்பிய சேனல்களை, விண்ணப்பத்தில் தேர்ந்தெடுத்து ஆபரேட்டர்களிடம் வழங்க வேண்டும். ஏற்கனவே உள்ள சேனல்களில் தேவையில்லாதவற்றை தெரிவித்தால், அந்த சேனல்கள் நிறுத்தப்படும். விண்ணப்பம் தவிர்த்து, பிரத்யேக ஆப் மூலமும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இந்த நடைமுறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றனர்.
பிப்ரவரி முதல் தேதிக்கு பின்னரும் பழைய நடைமுறையில் சேனல்களை பார்த்து வந்தால், அவர்களின் மாத கட்டணம் பலமடங்க உயர வாய்ப்பிருக்கிறது. அதிகம் விரும்பி பார்க்கும் பல சேனல்கள் கட்டண சேனல்களாகவே உள்ளன. கட்டண சேனல்கள் விளம்பரத்தின் மூலம் பெருமளவு வருவாய் ஈட்டுவதால், அவற்றை இலவசமாக வழங்கினால் கேபிள் டிவிக்கு அதிக தொகை செலவிடுவது குறையும் என்ற வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.