நீங்கள் மறுமலர்ச்சி தன்னம்பிக்கை இந்தியாவின் பிரதிபலிப்பு – பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் வாழ்த்து..!

Ravi UGC

உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற  நகரில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். அந்த போட்டியானது முதல் சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது.

இந்நிலையில், உலக கோப்பை செஸ் தொடரின் வெற்றியாளரைத் தேர்வு செய்வதற்கான “டை பிரேக்கர்” (Tie Breaker) சுற்று இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை நிறக் காயுடனும், கார்ல்சன் கருப்பு நிறக் காயுடனும் தங்களது ஆட்டத்தைத் தொடங்கினர்.

அதன்படி, பிரக்ஞானந்தா முதலில் e4-க்கு தனது காயை நகர்த்த, கார்ல்சன் e5-க்கு நகர்த்தினார். சிறிது நேரம் வேகமாக இருவரும் தங்களது காய்களை நகர்த்தினர். பிறகு மிகவும் நிதானமாக காய்களை நகரத்திய நிலையில், 47 வது காய் நகர்தலுடன் மேக்னஸ் கார்ல்சன் முதல் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்றார்.

இதனால் டை பிரேக்கர் சுற்றின் இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. இருவரும் மீண்டும் களமிறங்கினர். இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஏற்பட்டது. இருந்தும் ஆட்டம் தொடக்கம் முதலே கார்ல்சன் வேகமாக காய் நகர்த்தினார். இறுதியில் இந்த இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது.

இதனால் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன், 2.5 – 1.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று, 6 வது முறையாக உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த இறுதி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில், ‘ பிரக்ஞானந்தா உங்களின் பிரமிக்கவைக்கும் புத்திகூர்மை மிக்க ஆட்டங்களால், ஒவ்வோர் இந்தியரின் இதயத்தையும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நீங்கள் மறுமலர்ச்சி தன்னம்பிக்கை இந்தியாவின் பிரதிபலிப்பு. இந்த தேசம் உங்களை மிகவும் நேசிக்கிறது.’ என தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்