நிவர் புயல் காரணமாக யோகா, இயற்கை மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைப்பு.!
நிவர் புயல் காரணமாக நவம்பர் 27 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறவிருந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ கலந்தாய்வானது ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் ,இதனால் புதுச்சேரி கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.இது அதி தீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் நிவர் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 140கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அப்போது நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த நிவர் புயல் காரணமாக பல இடங்களில் மக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
அது மட்டுமின்றி இந்த நிவர் புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வும் ,சி.ஏ.தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தற்போது இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வானது வரும் 27-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை சென்னை அரும்பாக்கம் யோகா கல்லூரியில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் நிவர் புயல் இரவு கரையை கடந்தாலும் மழையின் தாக்கம் இருக்கும் என்பதால் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வானது தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த மேலும் தகவல்களை சுகாதாரத்துறை இணையத்தளத்தை பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.