அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எக்ஸ்ரே முடிவுகளை படசுருளில் வழங்க வேண்டும் – ஓபிஎஸ் அறிக்கை

Default Image

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எக்ஸ்ரே முடிவுகளை படசுருளில் வழங்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அஇஅதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 487 கோடி ரூபாயை திமுக குறைத்து ஒதுக்கியதாலேயே எக்ஸ்ரே முடிவுகளை வெள்ளைத்தாளில் அச்சிட்டு வழங்கும் நிலை அரசு மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், முதல்வர் இதற்கு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலையை அறிக்கையை ஒப்பிடும்போது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, நீதித் துறை நிருவாகம், நெடுஞ்சாலைகள் துறை, உயர் கல்வித் துறை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மதிய உணவு திட்டம், பள்ளிக் கல்வித் துறை, குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதன் காரணமாக அந்தத் துறைகளின் செயல்பாடுகளில் ஏதாவது கணக்கம் ஏற்படும் என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் அப்போது எழுந்தது. அது தற்போது நிருபிக்கப்பட்டுவிட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கு 19,420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்திய நிதிநிலை அறிக்கையில் 18,933 கோடி ரூபாய் நிதி தான் ஒதுக்கப்பட்டது. அதாவது, கிட்டத்தட்ட 487 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டது. இதன் விளைவு, ஊடுகதிர் படங்கள், அதாவது எக்ஸ்ரே, வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கக்கூடிய நிலை தற்போது அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டு இருக்கிறது.

தூத்துக்குடி பாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஊடுகதிர், அதாவது எக்ஸ்ரே எடுத்துக் கொண்ட மக்களுக்கு அதற்கான முடிவுகள் வெள்ளைத்தாளில் விநியோகிக்கப்படுகின்றன என்றும், இதற்குக் காரணம் நிதிப் பற்றாக்குறை என்றும், கடந்த சில வாரங்களாக இதுபோன்ற நிலை நிலவுவதாகவும், வெள்ளைத்தாளில் முடிவுகள் தரப்படுவதன் காரணமாக, முடிவுகள் தெளிவாக இல்லாத சூழ்நிலையில் வேறு ஒரு மருத்துவரிடம் காண்பித்து நோய் குறித்து இரண்டாவது கருத்தினை வாங்க முடியாத சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து மருத்துவக் கண்காணிப்பாளரிடம் கேட்டதற்கு, ஒப்பந்தம் விடுவதில் சில பிரச்சனைகள் இருப்பதால், இதுபோன்ற சூழ்நிலை நிலவுவதாகவும், படச்சுருளின் இருப்பு குறைவாக இருப்பதால், முக்கியமான மருத்துவம்-சட்டம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டும் படச்சுருளில் முடிவுகள் தரப்படுவதாகவும், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் முடிவுகள் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன. மேலும் படச்சுருளில் முடிவுகள் வழங்கினால் 50 ரூபாய் செலவாகிறது என்றும், வெள்ளைத்தாளில் எடுத்தால் எந்தச் செலவும் ஏற்படுவதில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வருகின்றன.

நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி எக்ஸ்ரே முடிவுகளை வெள்ளைத்தாளில் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதும், இரண்டாவது கருத்துரை வாங்கும் வகையில் வேறு ஒரு மருத்துவரிடம் காண்பிக்க வசதியாக தங்களுக்கு எடுக்கப்படும் எக்ஸ்ரேவுக்கான முடிவுகள் படச்சுருளில் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எக்ஸ்ரே முடிவுகளை படச்சுருளில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்