தவறான கணக்கெடுப்பு… தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்கள் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் என ரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்ட விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஸ்ரீபெரம்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது என்றும் தற்போதைய கொரோனா சூழலை கருத்தில்கொண்டால் தமிழகத்திற்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்றால், கடும் பற்றாக்குறை ஏற்படும் எனவும் கடிதம் வாயிலாக கூறியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் போதுமானது என மத்திய அரசால் தவறான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் குற்றசாட்டியுள்ளார்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பும்போது தமிழக அரசிடம் எதுவும் கேட்காமல் தானாகவே மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.