இன்று காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு.. முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு!
தமிழகத்தில் 444 உதவி காவல் ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று 2022-ம் ஆண்டிற்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளை தேர்வு நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெறுகிறது. மேலும், பிற்பகலில் முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. 197 மையங்களில் 43 மூன்றாம் பாலினத்தவர் உட்பட 2,21,213 பேர் எழுத உள்ளனர்.
தமிழக காவல் துறையில் 444 காவல் உதவி ஆய்வாளர்கள் (எஸ்.ஐ.) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச் சீட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் தேர்வு அடுத்தடுத்து நடத்தப்படும். இந்த அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கு தேர்ந் தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.