வங்கக்கடலில் உருவாகி வடதமிழகத்தை குறிப்பாக தலைநகர் சென்னையை மிரட்டி, ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கியது மிக்ஜாம் புயல். இந்த புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் முழுதாக நீங்கவில்லை. இன்னும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிக்க தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழைநீர் இன்னும் பல்வேறு பகுதிகளில் வடியாமல் இருந்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதியில் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு நபர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக விற்பனை நிலையங்கள் வைத்துள்ளவர்கள் பெரிய அளவில் பொருட்சேதத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இது குறித்து எழுத்தாளர் ராமகிருஷ்ணன் தனது தேசாந்திரிமுகப்புத்தக சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், புத்தகங்களை இழந்தோம். நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனது. புத்தகங்களை இடம் மாற்ற இயலவில்லை. ஏராளமான புத்தகங்கள் நனைந்து வீணாகிப்போகின.
கண்ணீரோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்களுக்கு பெரியது. இருபது லட்ச ரூபாயிற்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்க கூடும். மீதமுள்ள புத்தகங்களைக் காப்பாற்றி கொண்டு வந்து வீடு முழுவதும் நிரப்பியிருக்கிறோம். நேற்று முழுவதும் வீட்டிற்குள்ளும் தண்ணீர் வரும் நிலை. இரண்டு படிகள் தண்ணீரில் முழ்கிவிட்டன. மின்சாரமில்லை. இணைய தொடர்பில்லை. எவரையும் உதவி கேட்டு தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆயினும் அருகிலுள்ள நண்பர்கள் ஒடியோடி வந்து புத்தகங்களைக் காப்பாற்ற உறுதுணை செய்தார்கள்.
மழை நின்ற இன்றும் மின்சாரமில்லை. வீட்டைச்சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கண்முன்னே புத்தகங்களை இழப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டுகாலம் எழுதிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் வங்கி கடன் உதவியாலும் தான் தேசாந்திரி பதிப்பகம் துவங்கினோம். உங்கள் ஆதரவால் வெற்றிகரமாகவே நடத்தினோம். ஆனால் நேற்றைய மழை எங்களை வேரோடு சாய்த்து விட்டது.
புத்தகக் குடோனுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தோம். ஆனால் இயற்கை பேரிடர்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்துவிட்டார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலை. நெருக்கடியான சூழலில் ஈரமான புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன். எனக்கு தெரிந்த உலகம் புத்தகங்களும் வாசகர்களும் மட்டும் தான். அவர்கள் மீண்டும் என்னை மீட்பார்கள் என்ற நம்பிகையோடு காத்திருப்பதாக எழுத்தாளர் பதிவிட்டுள்ளார்.