பாஜகவை விட மோசம்…அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது..ஆதவ் அர்ஜுனா கடும் விமர்சனம்!
ஹிட்லர், முசோலினி அரசியல்போல் மோடி, ஸ்டாலின் அரசியல் உள்ளது என தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மிகவும் காட்டத்துடன் திமுக குறித்தும் பாஜக குறித்தும் நேரடியாக தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சி செய்கிறார். இதெல்லாம் என்ன அரசியல்?
என்னை பொறுத்தவரையில் திமுக அண்ணாமலையை செட் செய்துள்ளது. புலியை ஆடு சீண்டுவது போல அண்ணாமலை எங்களை சீண்டி வருகிறார். இனிவரும் காலங்களில் எங்களது தலைவரை தொட்டால் மக்கள் மத்தியில் உங்களை அம்பலப்படுத்துவோம். முதலில், அண்ணாமலை மோடிக்கு உண்மையாக இருக்கவேண்டும். பெண்களை கேவலமாக பேசக் கூடியவரை பாஜக மாநில தலைவராக வைத்திருக்கிறது” எனவும் ஆதவ் அர்ஜுனா காட்டத்துடன் பேசினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் ” ஹிட்லர், முசோலினி அரசியல்போல 200 மோடி, ஸ்டாலின் அரசியல் உள்ளது. மத்திய அரசை எதிர்ப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது என்பது தான் உண்மை. பாஜகவை திமுக மிகவும் மோசமாக செயல்படுகிறது என்பதும் உண்மை. அரசியலுக்காக வருமானத்தை விட்டவர் விஜய். நாங்கள் ஊழல் செய்து லண்டன் சென்று ஊழல் பணத்தை செலவு செய்யவில்லை. அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி சம்பாதித்தால் அது ஊழல் தான். எம்ஜிஆர் இறக்கும் வரை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ல் இருந்தது திமுக தான். அவரது ஆட்சியில் நீங்கள் வொர்க் பிரம் ஹோமில் இருந்தீர்கள். இப்போது திமுகவின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஓய்வுக்கு தயராக வேண்டும்.
வேங்கை வயலுக்கு விஜய் செல்வார், விளம்பரத்திற்காக அல்ல தீர்வுக்காக. திருமாவளவன் ஏன் வேங்கை வயலுக்கு செல்லவில்லை. திருமாவளவனை தடுத்து நிறுத்தியது யார்? எந்த அதிகாரம்?” என காட்டத்துடன் கேள்விகளையும் எழுப்பினார். அதனைத்தொடர்ந்து ” திமுகவில் சாதி உள்ளது. அரசியலில் சாதி என்பதை உருவாக்கியதே திமுகதான். சட்டசபையில் ஜனநாயகம் இல்லை. சட்டசபையில் திமுக கூட்டணி எம்.எல்.ஏ பேசினால் கூட காட்டுவது இல்லை. 10 மானிய கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்றுகிறார்கள். தவெகவில் சாதி கிடையாது.
அண்ணாவின் குறிக்கோள்களை நிறைவேற்றும் ஒரே தலைவர் விஜய் தான் வருகின்ற 2026 தேர்தலில் இளைஞர்கள் கூட்டம் புதிய முடிவெடுக்கும். அண்ணா திமுகவை உருவாக்கிய போது இளைஞர்கள் மட்டும்தான் கட்சியில் இருந்தார்கள். அதைப்போல தான் இப்போது த.வெ.க உள்ளது. விஜய் இனி தளபதி இல்லை-வெற்றி தலைவர். பலமான உள்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகி விட்டோம். ” எனவும் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் ” என்ன போராட்டம் நடத்துகிறீர்கள், இன்னும் 2 மாதத்தில் போராட்டம் என்றால் என்னவென்று விஜய் காட்டுவார். அண்ணா வழியில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் வழியில் காட்டுவோம். அன்று தெரிந்துக் கொள்வீர்கள் போராட்டம் என்றால் என்னவென்று” எனவும் பேசியுள்ளார்.