உலக செவிலியர் தினம்: “நீங்கள் தான் கடவுள்” என்று கூறி செவிலியர்களின் காலில் விழுந்து கண்ணீர் விட்ட மருத்துவமனை டீன்!!!
கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில்,’உலக செவிலியர் தினத்தை’ முன்னிட்டு நடைபெற்ற ஒரு நிழ்ச்சியில் மருத்துவமனையின் முதல்வர்(டீன்),செவிலியர்களின் காலில் விழுந்து “நீங்கள் தான் கடவுள்” என்று கூறி கண்ணீர் விட்டு மரியாதை செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ என்னும் செவிலியர்,ஐரோப்பாவில் நடைபெற்ற க்ரீமியன் போரில் இரவு வேளைகளிலும் கையில் விளக்கை ஏந்தி,போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்கு தேடிச் சென்று சிகிச்சையளித்து மருத்துவ சேவை புரிந்தார். எனவே,நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 ஆம் தேதி,ஒவ்வொரு ஆண்டும் “உலக செவிலியர் தினமாக” அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில்,கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் ‘உலக செவிலியர் தினத்தையொட்டி’ ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிழ்ச்சியில்,செவிலியர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்துக்கு மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன்,அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் மலர் தூவி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து,மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் செவிலியர்களிடையே பேசியதாவது,”தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.தற்போதைய சூழலில் நீங்கள்தான் கடவுள்”,என்று கூறி கண்ணீர் விட்டு அழுதபடி கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து மரியாதை செலுத்தினார்.இந்தச் சம்பவம் செவிலியர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.