சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது..!
2030ஆம் ஆண்டுக்குள் அதிக பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்தொடர்ச்சியாக இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடக்க உள்ளது. சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான், ஜெர்மனி, டென்மார்க், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்கேற்பாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கமாக புதிய முதலீடுகள் எப்போதும் சென்னையைச் சுற்றியே இருக்கும். ஆனால், இந்த உலக முதலீடு மாநாட்டில் தென்தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கிண்டியில் இந்து நந்தம்பாக்கம் வரையில் 30 மீட்டர் இடைவெளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும், சென்னையை பற்றிய குறிப்பு, சென்னையின் முக்கிய இடங்கள், உணவுகள் தொடர்பான புத்தகம் மற்றும் திருவள்ளுவர், ஜல்லிக்கட்டு, மாமல்லபுரம் கடற்கரை கோயில் இலச்சினை கொண்ட நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது.