“பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்”..ஆளுநரிடம் த.வெ.க தலைவர் விஜய் வைத்த கோரிக்கைகள்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கூடுதல் விசாரணை வேண்டும் எனவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை பிரச்சினைகளை தடுப்பது குறித்து நடவடிக்கையை தீவிரபடுத்துவதற்கு பேசுவதற்கு ஆளுநரை அவர் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த தகவலை தொடர்ந்து இன்று மதியம் 1 மணிக்குஆளுநரை சந்தித்து பேசுவதற்கு கையில் மனுவுடன் த.வெ.க.தலைவர் ராஜ் பவனுக்கு வருகை தந்தார். அங்கு வருகை தந்த அவர் ஆளுநரிடம் 15 நிமிடம் பேசிவிட்டு 3 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். ஆளுநரை விஜய் சந்தித்தபோது த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும், பொருளாளர் வெங்கட் ராமனும் உடன் இருந்தார்கள்.
சந்திப்பு நடந்ததை தொடர்ந்து த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ” இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள். அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார். நன்றி” எனவும் அறிக்கையில் ஆனந்த் கூறியுள்ளார்.
— TVK Party Updates (@TVKHQUpdates) December 30, 2024