ஊரக உள்ளாட்சி தேர்தலில் இளம்பெண் முதல் முதியோர் வரை வெற்றி பெற்று சாதித்த பெண்கள்.!
- தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த தேர்தல் முடிவில் வெற்றி பெற்று சாதித்த 21 முதல் 82 வரை பெண்கள்.
தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள ஒன்றிய கவுன்சிலர் 5067 பதவிக்கு தி.மு.க கூட்டணி 2,052 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 1,964 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 515 இடங்களில் அ.தி.மு.க கூட்டணி 227 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 248 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதில் பல சுவாரசிய சம்பவங்கள் நிலகலந்துள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய சரஸ்வதி, தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு அதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே தனது அரசு பணியான துப்புரவு வேலையை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிட்டார். தற்போது நடந்த தேர்தலில் 1,113 வாக்குகள் பெற்று 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து, சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி பூவனூர் சுக்கம்பட்டியில் 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதான பிரீத்தி வெற்றி பெற்றார். தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கும் பிரீத்தி பாமக வேட்பாளர் பூங்கோதை செல்வத்தை விட 1,050 வாக்குகள் அதிகம் பெற்றார். பின்னர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூசலாங்குடி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட இளம் பட்டதாரியான 22 வயதான சுபிதா வெற்றி பெற்றார்.
மேலும், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமியின் மனைவியான 80 வயது விசாலாட்சி வெற்றி பெற்றார். ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிட்ட அவர் 341 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.