பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!
திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார்.அப்பொழுது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் (ரேவதி) உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவரது மகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சத்யா திரையரங்க மேலாளர்கள், புஷ்பா-2 பட தயாரிப்பாளர்கள், ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் பாதுகாவலர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் இடைக்கால ஜாமீனில் ஒரு நாள் இரவு சிறையில் இருந்தார், மறுநாள் காலை விடுவிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு, அல்லு அர்ஜுன் நம்பபள்ளி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அன்று அல்லு அர்ஜுன் தரப்பு வழக்கறிஞர்கள் கடுமையான வாதங்களை முன்வைத்தனர். விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவரது தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், அல்லு அர்ஜுன் வேண்டுமென்றே யாரையும் புண்படுத்த விரும்பவில்லை, இதற்கு முன்னதாக, இதேபோல் ஹிந்தி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியிலும் ஒருவர் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டி வாதங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், அவரை ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்ட ஹைதராபாத் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது. இந்த நிபந்தனைகளின் படி, அனைவரும் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஜாமீன் வழங்கி நம்பபள்ளி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அல்லுவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.