போராட்டம் வாபஸ்…. ஜன.19ல் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை – அமைச்சர் சிவசங்கர்

minister sivasankar

தமிழ்நாட்டில் போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது, வேலைநிறுத்ததால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான்.

போராட்டம் நடத்த உரிமை உள்ளது, ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. அரசும், போக்குவரத்துக்கு தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவதாக இருக்கிறீர்கள் என கேள்விகள் எழுப்பினர்.  இதன்பின், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை இன்று பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜனவரி 19-ம் தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தலை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தனர். நாளை முதல் பணிக்கு திரும்புவதாகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உறுதி அளித்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!

இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களாக நடைபெற்று வந்த பஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது,  போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. முதலமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனவரி 19ம் தேதி மீண்டும் தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். கருணை அடிப்படையில் 800க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்து கழகங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் மற்றொரு கோரிக்கையான புதிதாக ஓட்டுநர், நடத்துநர்களை பணிக்கு எடுக்க வேண்டும் என்பதும் ஏற்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர், நடத்துநர்களுக்கான எழுத்து தேர்வு முடிந்து தற்போது நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் வரை நேர்முக தேர்வு நடைபெறும், அதன்பிறகு புதிதாக ஓட்டுநர், நடத்துநர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர்,  தொழிற்சங்கங்கள் முன்வைத்த 2 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது, மேலும் 2 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியுள்ளோம். அரசின் நிதி நிலையை பொறுத்து எஞ்சிய 2 கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என கூறியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்