12 மணி நேர வேலை மசோதா வாபஸ் – எம்எல்ஏக்களுக்கு கடிதம்!
வேலை நேரம் 12 மணி நேரமாக நீட்டித்த சட்ட மசோதா வாபஸ் பெறப்பட்ட நிலையில் எம்எல்ஏக்களுக்கு கடிதம்.
சென்னையில் நடைபெற்ற மே 1 தின நிகழ்ச்சியில் பேசிய, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டதாக அறிவித்திருந்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வாபஸ் பெறப்பட்டது.
மசோதா திரும்ப பெறப்படுவது குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 12 மணி நேரம் வேலை சட்ட மசோதா வாபஸ் பெறப்பட்ட நிலையில் எம்எல்ஏக்களுக்கு கடிதம் (செய்திக்குறிப்பு) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், 2023 ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு சட்டமன்றப் பேரவையில் கடந்த மாதம் 21ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர், இச்சட்ட முன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்த நிலையில், இச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெறுவதென முடிவு எடுத்து, அரசால் திரும்பப் பெறப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பெறுகிறது என கூறப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை சட்ட மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.