இதன் மூலம் பேருந்து போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்பது உறுதியாக தெரியவருகிறது – டிடிவி தினகரன்
இதன் மூலம் பேருந்து போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்பது உறுதியாக தெரியவருகிறது என டிடிவி தினகரன் ட்வீட்
கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப் போவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் தங்களது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் தொடர்பான சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். சாதக, பாதகங்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
டிடிவி தினகரன் ட்வீட்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் அவர்கள், ‘பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க தி.மு.க. அரசு திட்டமிடுவதாக ஆளுங்கட்சி தொழிற்சங்கமே குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சரே கூறியிருப்பதன் மூலம் பேருந்து போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்பது உறுதியாக தெரியவருகிறது.
மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கதக்கதல்ல. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இருதரப்பையும் பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
போக்குவரத்துறையில் புரையோடியிருக்கும் முறைகேடுகளை களையெடுத்து லாபநோக்கில் போக்குவரத்துறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.(4/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 6, 2023