துணை முதல்வராவாரா உதயநிதி.? எதிர்பார்ப்பில் திமுக தொண்டர்கள்.!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிப்பதற்கான வேலைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், இன்று அல்லது நாளை இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, துணை முதல்வராக அறிவிக்க கோரி திமுகவினர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக மூத்த நிர்வாகிகளே இந்த கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிலும் துணை முதல்வர் கோரிக்கையை முதலமைச்சர் முன்னிலையிலேயே முன்வைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக பேசுபொருளாக இருந்த இந்த துணை முதல்வர் விவகாரம், நேற்று விஸ்வரூபம் எடுத்தது. நேற்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகளான, துரைமுருகன், பொன்முடி. கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நேற்று நடைபெற்ற ஆலோசனையில் முதலமைச்சர் தீவிரமாக ஈடுபட்டதால், நிச்சயம் துணை முதல்வர் விவகாரம் குறித்து நேற்று பதில் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் நேற்று திமுக தொண்டர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. தற்போது வரையில் துணை முதல்வர் விவகாரம் குறித்து திமுக தலைமையில் இருந்து எந்த விதமான அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை. இருந்தாலும் இன்று இதுகுறித்த தகவல் வெளியாகும் என தொண்டர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அதேநேரம் தற்போது வெளியான தகவலின்படி, நாளை செப்டம்பர் 20ஆம் தேதியன்று உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் இன்று நடைபெறும் என்றும் இது குறித்த சில முக்கிய செய்திகள் தகவல்கள் மூத்த நிர்வாகிகளுக்கு பகிரப்பட்டுவிட்டன என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் துணை முதல்வர் பதவி குறித்த பேச்சுகள் தற்போது உச்சம் பெற்று இருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் அதற்கான பதில் கிடைத்துவிடும் என்கிறது அரசியல் வட்டாரம்.