உ.பி., ம.பி.யை தொடர்ந்து தமிழகத்திலும் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..?
ம.பி மற்றும் உ.பி மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..?
கொரோனா வைரஸ் 2019-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மாற்ற நாடுகளில் பரவத்தொடங்கியது. இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதால் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கின் போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர், கொரோனா வைரஸ் குறையத்தொடங்கியது.
இதனால், இந்தாண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. பின்னர், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை இந்தியா எதிர்கொள்ள நேரிட்டது. நாடு மெல்ல மெல்ல 2-வது அலையிலிருந்து மீண்ட பின் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. உலகின் பல பகுதிகளில், இரண்டாவது அலை இன்னும் தொடர்கிறது. இந்தியாவில் இப்போதும் கூட நாள்தோறும் தொடர்ந்து புதிய பாதிப்புகள் ஏற்படுகிறது.
இந்நிலையில், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய வருகிறது. இதுவரை ஆல்பா, பீட்டா, டெல்டா போன்ற உருமாற்றங்கள் ஏற்பட்டு தற்போது ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வகையாக உள்ளது.
கடந்த 26 நவம்பர்- ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் கொரோனா B.1.1.529 உருமாற்றத்தை ஓமைக்ரான் வகையாக அறிவித்தது. இந்த கொரோனா ஓமைக்ரான் உருமாற்றத்தால் முதன்முதலில் தென்ஆப்ரிக்காவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. சமீபகாலமாக பல நாடுகளில் கொரோனா வேகமாக பரவுவதற்கு ஓமைக்ரான் உருமாற்றமும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
டெல்டா பாதிப்புகள் குறைந்ததால் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஓமைக்ரான் அச்சுறுத்தி வருகிறது. இந்த ஓமைக்ரான் வைரஸ் டெல்டாவை விட 5 மடங்கு வேகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது.இந்தியா முழுவதும் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65, டெல்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அளவில் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளதாக நேற்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். அதிகபட்சமாக சென்னையில் 26 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில், நேற்று ஒமைக்ரான் பரவல் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ஒமைக்ரான் அச்சுறுத்தலால் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கவும், இரவு ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முகஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக்கு பிறகுதான் ம.பி மற்றும் உ.பி மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.