வரி வசூலிக்காத அதிகாரிகள் தாமதமாக ஊதியம் வழங்கினால் ஏற்று கொள்வார்களா..? – உயர்நீதிமன்றம்
சரியாக வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் அவர்கள் ஏற்பார்களா?
தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் வெளிநாட்டிலிருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த நிலையில் நுழைவு வரியிலிருந்து விலக்கு கூறியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இறக்குமதி காருக்கு நுழைவு வரி ரத்து வழக்கை, 2018-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றமே கூறிவிட்ட நிலையிலும், வரியை வசூலிக்காமல் அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர். அதிகாரிகள் ஒழுங்காக வரி வசூலிக்கவில்லை என தமிழக நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையில் குற்றம்சாட்டியதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், வரியை வசூலிக்காமல் இழுத்தடித்து வருவாய் இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், சரியாக வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் அவர்கள் ஏற்பார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, அதிகாரிகள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால் அரசை நடத்த முடியாது என்று கூறி, சொகுசு கார் நுழைவு வரி தொடர்பான வழக்குகள் அனைத்திலும் ஆகஸ்ட் 16-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.