திமுக-விசிக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை.! திருமாவளவன் ‘பளீச்’ பதில்.!
திமுக - விசிக கூட்டணி இடையே அந்த சிக்கலும் இல்லை. இனி எழுவதற்கும் வாய்ப்பில்லை என விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘மது ஒழிப்பு மாநாடு’ நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன், ‘அதிமுகவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம்.’ என்று கூறியதிலிருந்து ‘திமுக-விசிக’ கூட்டணி பற்றிய பேசுபொருட்கள் இன்னும் ஓய்ந்தபடில்லை.
முதலில், அதிமுக அழைப்பு சர்ச்சை, அடுத்ததாக விசிக தலைவர் திருமாவளவன் ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்று பேசிய வீடியோ பதிவிட்டு சர்ச்சை, மதுரையில் விசிக கொடிகம்பம் அகற்றம் என ‘திமுக-விசிக’ கூட்டணி பற்றிய பேச்சுக்கள் நீண்டு கொண்டிருக்கின்றன.
இந்த அரசியல் பரபரப்பை மேலும் பரபரப்பாக மாற்ற, விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ” 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட எங்கள் தலைவர் திருமாவளவனை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லை” என பேசி அரசியல் களத்திற்கு மேலும் ஓர் அசைவை கொடுத்துவிட்டார்.
இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில் ” திமுகவுடன் தோளோடு தோள் நிற்கும் அரசியல் கட்சிகளில் நல்ல இடத்தில் விசிக உள்ளது. இந்த சூழலில், அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர் கொள்கைப் புரிதலின்றி பேசியிருப்பது கூட்டணி அறத்திற்கு ஏற்புடையது அல்ல. வரலாற்றுப் பின்னணி புரிதலுடைய திருமாவளவன் நிச்சயமாக இந்தக் கருத்தை ஏற்க மாட்டார். திருமாவளவனின் ஒப்புதலுடன் அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருக்க மாட்டார் என்பது என் எண்ணம்” என தெரிவித்து இருந்தார். எ
இப்படியான சூழலில், திமுக – விசிக கூட்டணி பற்றி கோவையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறுகையில், ” திமுக விசிக கூட்டணி இடையே எந்த சிக்கலும் எழாது. இனி எழுவதற்கு வாய்ப்பில்லை. ஆதவ் அர்ஜுனா பேசிய விவகாரம் உட்கட்சி தொடர்புடையது. இந்த உட்கட்சி விவகாரங்களை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கலந்தாலோசித்து முடிவுவெடுப்போம். நான் கட்சி நிர்வாகிகளுடன் ஏற்கனவே தொலைபேசியில் பேசிவிட்டேன்.” எனப் திருமாவளவன் பேசியிருந்தார்.