காவல் துறை விசாரணை என்ற பெயரில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு என்றுதான் முடிவு கட்டுமோ? – ஈபிஎஸ்

Edappadi Palanisamy

காவல் துறை விசாரணை என்ற பெயரில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு என்றுதான் முடிவு கட்டுமோ? என கேள்வி ஈபிஎஸ் அறிக்கை. 

இந்த விடியா திமுக அரசின் ஏவல் துறையாக விளங்கும் காவல் துறை, பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீதும், அரசின் குறைகளை சுட்டிக் காட்டுபவர்கள் மீதும் அடக்குமுறையை ஏவி விடுவதோடு மட்டுமல்லாமல், ஆளும் கட்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு ஜால்ரா அடிக்கும் கட்சியைச் சேர்ந்தவரையே கொடுமைப்படுத்திய அவலமும் அரங்கேறியுள்ளது.

விடியா அரசையும், அதனை நடத்தி வரும் திமுக-வின் பொம்மை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினையும் தூக்கிப் பிடித்து நிறுத்தும் இயக்கங்களில் ஒன்றான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை நகர முன்னாள் செயலாளரும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ரோஜா கோல்டு ஹவுஸ் நகைக் கடை உரிமையாளருமான திரு. ரோஜா ராஜசேகர் என்பவர் காவல் துறை கொடுத்த தொடர் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட கொடுமை நடந்துள்ளது.

திரு. ராஜசேகர் சில நாட்களுக்கு முன்பு ஒருவரிடம் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி, அவரை விசாரிக்க திருச்சி பகுதியைச் சேர்ந்த காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
திரு. ராஜசேகரின் தந்தை திரு. பிச்சைக்கண்ணு பத்தர் அவர்கள் மிகுந்த கண்ணியமாக இப்பகுதியிலே வாழ்ந்தவர். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், இது போன்று செய்ய வாய்ப்பே இல்லை என்பது பட்டுக்கோட்டை பகுதி மக்களின் கருத்து. நகைக் கடைத் தொழிலில் விசாரணை என்பது வழக்கமான ஒன்றுதான் என்று சொன்னாலும், அவருடைய மனைவி திருமதி லட்சுமி அவர்களையும் சம்பந்தமே இல்லாமல் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான திரு. ராஜசேகர் ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். போராட்ட குணம் உள்ள பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார் என்று சொன்னால் அதற்கு காரணமானவர்கள் மீது, ஓய்வு பெற உள்ள நிலையிலாவது தமிழக காவல் துறை தலைவர் (DGP) மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் திரு. ராஜசேகரையும், அவரது குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கினார் என்ற செய்தி ஏற்புடையதல்ல.

காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் அத்துறை இல்லாமல் தறிகெட்டு அலைவது, தமிழகத்தை மயான பூமியாக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இந்த அராஜக ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிப்பதும், நேர்மையாக தொழில் செய்பவர்கள் தண்டிக்கப்படுவதும் கொடுமையிலும் கொடுமை. இந்த படுபாதகச் செயல்களுக்கு முடிவுகட்டும் காலம் நெருங்கிவிட்டது. பட்டுக்கோட்டை நகைக் கடை அதிபர் திரு. ராஜசேகர் தற்கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கை, தனி அமைப்பை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

காவல் துறையினரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட திரு. ராஜசேகர் அவர்களுடைய குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என்றும்; இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் உட்பட அனைவரையும் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்