ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படுமா? எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டம்!
பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வானதை அடுத்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டம்.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஒதுக்க சபாநாயகரிடம் நேற்று எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், அவையில் இப்பிரச்னையை எழுப்ப அதிமுக முடிவு செய்துள்ளது.
பொதுச்செயலாளராக எடப்பாடி:
இதனிடையே, இபிஎஸ் எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்து, ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்புக்கு பின் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவும் தாக்கல் செய்துள்ளார்.
துணைத்தலைவர் இருக்கை:
இந்த சமயத்தில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருப்பது தொடக்கம் முதலே இபிஎஸ் விரும்பவில்லை.
அதிமுக திட்டம்:
இதனால் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து இபிஎஸ் தரப்பு சபாநாயகருடன் விவாதித்து வருகிறது. ஆர்பி உதயகுமாருக்கு இருக்கையை ஒதுக்குமாறு நேற்று சபாநாயகரை சந்தித்து அதிமுக கொறடா எஸ்பிஇ வேலுமணி வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. இதனால் சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.