தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலத்தில் பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்துள்ளார்.
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்த நிலையில், இதுவரை 5 கட்டங்களாக 95 மாவட்ட செயலாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்துவிட்டார்.
இந்த நிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜய்யை, அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், பல்வேறு கட்சிகளுக்குத் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தவர்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், இவர் தவெகவுக்கு பணியாற்ற ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனம் பெற்றுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில், பிரசாந்த் கிஷோருடன் 2.30 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அவரின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஆகியோருடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் தொடர்பான விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்த சந்திப்பின் போது தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர், தவெக சிறப்பு ஆலோசகராக செயல்பட முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் இல்லாமல் நட்பு அடிப்படையில் பணியாற்றுவார் எனவும் கூறப்படுகிறது.