14 முறை முல்லை பெரியாறு அணைக்கு சென்று வந்த தேதியை ஓபிஎஸ் தருவாரா…? – அமைச்சர் துரைமுருகன்
14 தடவை முல்லைப் பெரியார் அணைக்கு சென்றேன் என்கிறாரே எதிர்க்கட்சித் துணைத் தலைவர். அது எந்தெந்த தேதிகளில் என்று குறிப்பிடுவாரா?
சென்னை : முல்லைப் பெரியாறு அணையி நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று ஆய்வு செய்தனர். அணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவுக்கு நீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ததில்லை. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பற்றி பேச இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோருக்கு தகுதி இல்லை என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஓபிஎஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தான் முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்ததில்லை, பார்வையிடவில்லை என்று மாண்புமிகு அமைச்சர் திரு. துரைமுருகளின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அதிமுக ஆட்சியில் தான் 14 முறை நான் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று தண்ணீரை பாசனத்திற்காக திறந்துவிட்டு ஆய்வு செய்திருக்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வண்ணம் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘5.11.2021 அன்று நான் முல்லைப் பெரியார் அணைக்கு சென்று பார்வையிட்டுவிட்டு வந்தபோது, அங்கிருந்த பத்திரிக்கை நிருபர்கள் முல்லைப் பெரியார் அணை சம்பந்தமாக சில கேள்விகள் கேட்டார்கள்.
அதில் ஒரு நிருபர், முல்லைப் பெரியார் அணை சம்பந்தமாக மாண்புமிகு திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகின்ற நிகழ்ச்சி குறித்து ஒரு கேள்வி கேட்டார்.
அந்த கேள்விக்கு பதில் சொல்லும் போது தான், “ஓ.பி.எஸ்ஸோ அல்லது இ.பி.எஸ்ஸோ ஒரு முறையாவது இந்த அணைக்கு சென்று பார்த்திருக்கிறார்களா? 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் ஒரு முறை கூட இந்த அணையை இந்த இரண்டு முன்னாள் முதல்வர்களும் அணையை சென்று பார்க்கவில்லை. அப்படி ஒரு முறையும் சென்று முல்லைப் பெரியார் அணையை பார்க்காதவர்களுக்கு இந்த அணையை முன் வைத்து போராட்டம் நடத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை” என்று சொன்னேன்.
என் பேட்டிக்கு பதில் அளித்து மாண்புமிகு திரு.ஓ.பி.எஸ் அவர்கள் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், “நானா முல்லை பெரியார் அணைக்கு போகவில்லை;14 தடவைபோயிருக்கிறேன்” என்று நறுக்கென்று இதற்கு பதில் அளித்துவிட்டு வேறு எதை எதையோ அறிக்கையில் எழுதியிருக்கிறார். அதில் எல்லாம் உப்பில்லை சப்பில்லை என்று விட்டுவிடுகிறேன்.
இந்த 14 தடவை முல்லைப் பெரியார் அணைக்கு சென்றேன் என்கிறாரே எதிர்க்கட்சித் துணைத் தலைவர். அது எந்தெந்த தேதிகளில் என்று குறிப்பிடுவாரா? நான் தேதி எல்லாம் குறித்து வைக்கவில்லை என்று திரு.ஓ.பி.எஸ் சொல்லலாம். தேதிகளை இவர் குறித்து வைக்காவிட்டாலும் பொதுப்பணி இலாக்காவில் குறித்து வைத்திருப்பார்கள்.
எந்தெந்த தேதிகளில் என்னென்ன நடந்தது; யார்யார் கலந்து கொண்டார்கள்; என்ன முடிவு எடுக்கப்பட்டது; என்பதையெல்லாம் தேதிவாரியாக குறிப்பு எழுதி வைப்பது இலாக்காவில் நெடுநாட்களாக கடைபிடிக்கப்பட்டுவரும் வழக்கம். அந்த குறிப்பை “காலண்டர்” என்பார்கள் இலாக்காவில்.
அந்த “காலண்டரில்” திரு. ஓ.பி.எஸ் அவர்கள் பொதுப்பணித் துறைக்கு அமைச்சராகவோ அல்லது முதல்வராகவோ 2011 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் முல்லைப் பெரியார் அணைக்கு சென்று வந்த தேதிகளை குறிப்பிட்டு சொல்ல முடியுமா? அப்படி அவர் தேதிகளை குறிப்பிட்டு சொன்னால், அது பதிவாகியிருந்தால் “சபாஷ் !” என்று நானே பாராட்டுகிறேன். காலண்டரில் முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று வந்ததற்கு ஆதாரமாக என்ன சொல்கிறார் ஓ.பி.எஸ் என்றால், “நான் ஒரு முறை தண்ணீரை திறந்து வைப்பதற்கு போய் பூ தூவி தண்ணீரை திறந்து வைத்து விட்டு வந்தேன்” என்கிறார்.
எல்லா அணைகளிலும் அணையின் மேலிருந்து தான் தண்ணீரை திறப்பார்கள். ஆனால், முல்லைப் பெரியாறு அணையில் ஒரு விசித்திரம். தண்ணீர் திறக்கிற போது அணைக்குப் போகத் தேவையில்லை. அணையினுடைய பின் பகுதியில் இருந்து தான் தண்ணீரை திறப்பார்கள். ஏனென்றால், நாம் அணையின் முன் பகுதியிலிருந்து தண்ணீர் எடுப்பதிலலை, பின் பகுதியிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து, அதில் மின்சாரம் தயாரிக்கப்பட்ட பின்னர் அது பாசனத்திற்கு விடப்படுகிறது.
நாம் தண்ணீர் எடுக்கிற இடத்திலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு செல்வதற்கு சுமார் 1% மணி நேரம் ஆகும். அதாவது, தண்ணீர் எடுக்கிற இடத்திலிருந்து அணையை பார்க்கக்கூட முடியாது. சுருக்கமாக சொன்னால், அணையின் நீரை தொட்டுவிட்டு வந்திருக்கிறாரே தவிர அணையை கண்டுவிட்டு வரவில்லை. அடுத்து ஒரு கொசுறு சமாச்சாரம்.
உச்ச நீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்தாமல் இருக்கும் வகையில் கேரள அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. அதை எதிர்த்து அவங்க அம்மா தான் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து முல்லைப் பெரியார் உரிமையை காத்தவர் என்று திரு ஓ.பி.எஸ் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
கோர்ட்டில் யாராவது கேஸ் போட்டால் அந்த கேஸுக்கு நம்பர் வாங்கினால் தான் அது விசாரணைக்கு வரும். இல்லாவிட்டால் அந்த வழக்கின் கதி அதோ கதிதான்.
இங்கே அது தான் நடந்தது. அவங்க அம்மா பெயரளவுக்கு வழக்கு தொடுத்தார்களே தவிர நம்பர் வாங்காமலேயே விட்டுவிட்டார்கள் அதனால் பல மாதங்களாக வழக்கும் வரவில்லை விசாரணையும் இல்லை. கடைசியில் வீட்டுக்கும் போய்விட்டார்கள்.
அடுத்து ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்கள் தான் அந்த வழக்குக்கு நம்பர் வாங்கி, வழக்கு முடித்து, வென்றார்கள்! போட்ட வழக்குக்கு பல மாதங்களாக நம்பர் கூட வாங்காத அவங்க அம்மாவைத் தான் ‘முல்லைப் பெரியார் காத்த அம்மணி’ என்கிறார் ஒ.பி.எஸ்.’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.