இந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுமா.? உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை.!
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான வழக்கு, நாளை விசாரணை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கலாம் என்ற தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குழு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சித்தார்த் லூத்ரா, பொங்கல் நடைபெறும் ஜனவரி மாதத்துக்கு முன்னதாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென முறையிட்டிருந்தார். இதேபோல் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுடன் இயற்றப்பட்டதை எடுத்துக்கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு, நீதிபதிகள் அமர்வு விசாரணையை, இன்று (நவம்பர்-23) ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்கள், இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை விசாரணைக்கு வர இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக இன்று எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்தது. அதில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.