மீண்டும் ஊரடங்கா? – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிப்பது குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன்,அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று காலை 11 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,ஜனவரி 3 ஆம் தேதி முதல் 6 – 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில்லாமல் வகுப்புகள் நடத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில்,இதுகுறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் உள்ளது.
மேலும்,ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,மீண்டும் ஒருநாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் 1,088 ஆக இருந்த கொரோனா பாதிப்பு டிசம்பர் 4-வது வாரத்தில் 1,720 ஆக அதிகரித்துள்ளது. இதனால்,சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.