“சத்தமில்லாமல் இவர் உள்ளே வந்து விடுவார்;இவர்களின் நற்பெயரை கெடுத்து விடுவார்?” – எம்பி ஜோதிமணி காட்டம்!

Default Image

தமிழகம்:பாலியல் கொடுமைக்கு நீதிகேட்டு காவல்நிலையம் போனால் இதுதான் நடக்கும் என்றால்,உயிரிழந்த கரூர் மாணவியின் குடும்பம் என்னபாடு பட்டிருக்கும்? என்று எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரில் பாலியல் கொடுமையால் கடந்த 19 ஆம் தேதி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக,காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற உயிரிழந்த மாணவியின் தாயார்,உறவினர்களிடம் கொடூரமாக நடந்து கொண்டதாக காவல் ஆய்வாளர் கண்ணதாசன் நேற்று இரவு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில்,தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் கண்ணதாசன், சத்தமில்லாமல் மீண்டும் உள்ளே வந்து,மீண்டும் அதே தவறை செய்வார் என்றும் காவல்துறையில் நேரம் காலமில்லாமல் சிறப்பாக பணியாற்றுகிற அதிகாரிகளின் நற்பெயரையும் சேர்த்து இதுபோன்ற கயவர்கள் கெடுத்துவிடமாட்டார்களா? என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“கரூரில் பாலியல் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார்,உறவினர்களிடம் கொடூரமாக நடந்துகொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் நேற்று இரவு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மீது இதுவரை வழக்கு பதிவுசெய்யப்படவில்லை.

உடனடியாக அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு நிரந்தர பணிநீக்கம் செய்யப்படவேண்டும். இதுதொடர்பாக நேற்றே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகிய இருவருக்கும் புகார் அனுப்பியுள்ளேன்.அந்த பெண்ணின் குடும்பத்திற்கு சட்டரீதியான உதவிகளை வழங்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

ஆய்வாளர் கண்ணதாசன் குடிபோதையில் இருந்திருக்கிறார்.இரவு நேரத்தில் பாலியல் கொடுமையால் பெண்ணை பறிகொடுத்த கணவனை இழந்த ஒரு பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்திருக்கிறார். எழுத கூசும் வார்த்தைகளால் கேவலமாக பேசியிருக்கிறார் இரவுமுழுவதும் காவல் நிலையத்தில் பெண்களை இருக்க செய்திருக்கிறார்.

இரவு முழுவதும் உறவினர்களை லாக்கப்பில் வைத்து அடித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கவும் முயன்றிருக்கிறார். பாலியல் கொடுமைக்கு நீதிகேட்டு காவல்நிலையம் போனால் இதுதான் நடக்கும் என்றால் அந்த குடும்பம் என்னபாடு பட்டிருக்கும்?

இது தண்டனைக்குரிய குற்றமில்லையா? தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் சத்தமில்லாமல் மீண்டும் உள்ளே வந்துவிடுவார்.மீண்டும் அதே தவறை செய்வார். காவல்துறையில் நேரம் காலமில்லாமல் சிறப்பாக பணியாற்றுகிற அதிகாரிகளின் நற்பெயரையும் சேர்த்து இதுபோன்ற கயவர்கள் கெடுத்துவிடமாட்டார்களா?.

எனவே,சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்