அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா? தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் அதிருப்தி.!
வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்த தொகுதி கிடைக்காததால் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி உள்ளிட்டோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார்கள். அப்போது, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கியுள்ளோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
தேமுதிகவுக்கு தொகுதி எண்ணிக்கை குறைவாக இருந்ததால், அந்த சமயம் பேச்சுவார்த்தையை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மீண்டும் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. தேமுதிக சார்பில் துணை செயலாளர் பார்த்தசாரதி, அவை தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மனோகர் ஆகியோர் நேற்று அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேசியுள்ளார்கள்.
அப்போதும் 12 தொகுதிகளில் இருந்து 13 வரை ஒதுக்கப்படுவதாக பேசப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திடம் பேசிய போது, பாமகவிற்கு நிகராக தங்களுக்கு தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் எங்களுக்கு பூத் கமிட்டி உள்ளது எனவும் கூறியுள்ளார். இதனால் தொகுதி குறைவாக கொடுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
அப்படி கொடுத்தால் 20 தொகுதிகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஒரு எம்பி சீட்டு வழங்க வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்திள்ளார். இந்நிலையில், 3ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை தொடங்குவதாக இருந்தது. விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாததால், தேமுதிகவுக்கு அதிக வாக்கு வங்கி கிடைக்காது. ஆகையால், 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதில் அதிருப்தி அடைந்த தேமுதிக இன்று பேச்சுவார்த்தைக்கு வராமலேயே அவர்களது கட்சி அலுவலகத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே, அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. பாமகவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கு தரவில்லை என தேமுதிக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதனிடையே சசிகலாவுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் குரல் கொடுத்திருந்தது இது ஒரு காரணமாக கருதப்படுகிறது.
அதனால் தான் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்தைக்கு வராமல் அமைச்சர்கள் வந்து எங்களை சந்திக்கிறார்கள் என குற்றசாட்டிக்கின்றனர். இதையடுத்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு தேமுதிக தாவலாம் என்றும் கூறப்படுகிறது.