தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு தேவைப்படுமா? – மருத்துவ நிபுணர்கள் விளக்கம்!
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை.
சீனாவை மீண்டும் மிரட்டி வரும் புதிய வகை கொரோனா பரவல், இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவக்குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், அறிகுறி இருந்தால் தனிப்படுத்த வேண்டும் என்றும் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கிய மருத்துவ நிபுணர் ராம் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், புதிய வகை கொரோனவால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. வழக்கமான கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றினாலே புதிய வகை பரவலை தடுத்துவிடலாம்.
தடுப்பூசி செலுத்திவர்களுக்கு புதிய வகை கொரோனா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டியது அவசியம். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய வகை கொரோனா பரவும் நாடுகளில் இருந்து சென்னை வருவோரை கண்டறிந்து அவர்களை பரிசோதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், புதிய வகை கொரோனா குறித்து வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். உறுதியான செய்திகளை மட்டும் அறிந்து செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் உருமாறிக்கொண்டே இருந்தாலும் அடுத்தடுத்த அலைகளில் அதன் தாக்கம் குறைந்து கொண்டே இருக்கும். அதிக பேருக்கு தொற்று ஏற்பட்டாலும் பதிவு குறைவாக தான் உள்ளது எனவும் மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.