காவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா? இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முக்கிய முடிவு!
காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதுவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு காவிரி நீரை திறக்காத நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சமயத்தில் நேற்று டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநில அரசு அதிகாரிகள் காணொளி வாயிலாக பங்கேற்றனர். அப்போது அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதை ஏற்க மறுத்த கர்நாடக அரசு தங்கள் குடிநீர் தேவைக்கு போதுமான தண்ணீரே இருப்பதால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் கூறியுள்ளது. இறுதியை அந்த கூட்டத்தில் இன்று முதல் செப்டம்பர் 12 வரை வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் நதிநீர் பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.