தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வா? – அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
இரு சக்கர வாகனங்கள் டாக்ஸியாக பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என அமைச்சர் சிவசங்கர் பேட்டி.
கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நாட்டில் பல மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, முதலமைச்சர் உத்தரவின் பேரில், மக்களுக்கு சிரமம் இருக்க கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு ஏதும் செய்யவில்லை என கூறினார்.
2000 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2,400 பேருந்துகள் ஜெர்மன் நிறுவன பங்களிப்புடன் வாங்கவுள்ளோம். இதனால், விரைவில் புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.
மேலும், ரேப்பிடோ குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பைக் டாக்சி முறையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. அதாவது, இரு சக்கர வாகனங்கள் டாக்ஸியாக பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என்றும் இதற்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையக இல்லை எனவும் கூறினார். மேலும், அகவிலைப்படி உயர்வு குறித்து ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.