இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? – சீமான்

Published by
Venu

மதக்கலவரத்தை ஏற்படுத்த முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? என்று  சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் அருண் பிரகாசு என்பவர் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டதை முன்வைத்து அதற்கு மதச்சாயம் பூசி, கலவரம் செய்ய முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. சட்டம் ஒழுங்கைக் கட்டிக்காப்பதும், சாதி, மதம் என எதன்பொருட்டும் எவ்விதப்பூசலும், வன்முறையும் ஏற்படாதவண்ணம் தடுப்பதுமான தனது கடமையைத் திறன்படச் செய்து முடித்த காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில் மக்களிடையே மதக்கலவரத்தை ஏற்படுத்துவதன் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு அவர்களிடையே வாக்குவேட்டையாடும் மதவெறிக்கும்பல் தமிழகத்திலும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிற நிலையில், அருண் பிரகாசின் கொலையைக் காரணம் காட்டி, அதற்குள் மதத்தைக் காரணியாக வைத்துக் கலவரப்பூமியாக மாற்ற முனையும் கொடுஞ்செயல் இராமநாதபுரம் காவல்துறையினரால் முடக்கப்பட்டு, மதநல்லிணக்கமும், சமூக ஒற்றுமையும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதனைச் சிறப்பாகச் செய்து முடித்த காவல்துறை அதிகாரியைப் பாராட்டாது பதவியிறக்கம் செய்திருப்பது மோசடித்தனமில்லையா?

அப்பா நெல்லை கண்ணன் கைது செய்யப்படுவார் என்பதை டிவிட்டரில் எச்.ராஜா மறைமுகமாகப் பதிவுசெய்ததும் அவர் உடனடியாகக் கைதுசெய்யப்படுவதும், மதச்சாயம் பூச வேண்டாம் எனச் சமூக வலைத்தளத்தில் கருத்திட்டு, மதக்கலவரம் ஏற்படாது தடுத்த காவல்துறை அதிகாரி அவசர அவசரமாகப் பந்தாடப்படுவதும் சனநாயகத் துரோகமில்லையா? எவ்வித அதிகாரத்திலும் இல்லாத எச்.ராஜாவுக்கு அரசு அதிகாரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும், ஆணைப் பிறப்பிப்பதற்கும் யார் உரிமை தந்தது? தமிழகத்தையும் நாங்கள்தான் ஆளுகிறோம் எனும் பொருளில் பாஜகவின் தேசியச்செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் பதிவு செய்யத் துணிவு எங்கிருந்து வந்தது? தமிழகத்தை உண்மையில் ஆள்வது யார் எடப்பாடி பழனிச்சாமியா? எச்.ராஜாவா? மாநிலத் தன்னாட்சிக்கு முழக்கமிட்ட அறிஞர் அண்ணாவின் பெயரில் இயங்குகிற ஒரு கட்சி, தனது அரசாங்க அதிகாரிகள் மீதான தன்னாட்சியையே இழந்து நிற்பது வெட்கக்கேடானது.

விநாயகர் சதுர்த்திக் கொண்டாடியதால் கொலைசெய்யப்பட்டார் எனக்கூறி இசுலாமியர்கள் மீது மதத்துவேசத்தை வெளிப்படுத்த முயலும் எச்.ராஜா போன்ற பெருமக்கள் என்றைக்கு பிள்ளையார் சதுர்த்திப் பேரணியில் பங்கேற்று கடலிலோ, குளத்திலோ கரைக்க மக்களோடு நின்றார்கள்? மக்களைத் தூண்டிவிட்டு மதவெறுப்பை உருவாக்கி சமூக அமைதியைக் குலைத்ததைத் தவிர இப்பெருமக்கள் செய்ததென்ன? ஒரு மரணத்திற்குக்கூட மதச்சாயம் பூசி, மக்களைத் மதத்தால் துண்டாடடிப் பிரித்துப் பிளக்கும் இப்பெருமக்கள், மண்ணுரிமைக்காகப் போராடுவோரை பிரிவினைவாதிகள் என்பது கேலிக்கூத்தில்லையா?

அருண் பிரகாசு கொலைசெய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்கத் தனிப்பட்ட முன்விரோதமே காரணம் என்பது காவல்துறையின் விசாரணையில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டும், அதனை வைத்து அரசியல் செய்து, மதக்கலவரத்தை ஏற்படுத்திச் சமூக அமைதியை குலைக்க முனையும் மதவெறியர்களையும், குண்டர்களையும் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய தமிழக அரசு, நியாயத்தின் பக்கம் நின்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து மதவெறியர்களின் செயலுக்கு ஆதரவாய் நிற்பது மிகக்கீழானது.

குஜராத்தில் இசுலாமியர்களைக் கொன்றொழித்த இந்துத்துவப் பயங்கரவாதிகளின் செயல்களை வேடிக்கை பார்த்த அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போல, மதக்கலவரங்களையும், கொலைகளையும் வேடிக்கைப் பார்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டதா தமிழக அரசு? குஜராத், உத்திரப்பிரதேசம் போலவும் தமிழகத்தை மதவெறியர்களின் கூடாரமாக, கலவரப்பூமியாக மாற்ற முனையும் ஆபத்தானப் போக்கிற்கு ஆதரவாய் நிற்கத் துணிந்துவிட்டதா எடப்பாடி பழனிச்சாமி அரசு? சாத்தான்குளம் படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காது அரசியல் நெருக்கடி வருகிறவரை அவர்களைக் காப்பாற்ற முயற்சியெடுத்த அதிமுக அரசு, இராமநாதபுரத்தில் நேர்மையோடு செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுத்திருப்பது அதிமுக அரசின் அப்பட்டமான மக்கள் விரோதப்போக்கையே காட்டுகிறது.

இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மீது நடவடிக்கை எடுத்திருப்பதற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மக்களின் உணர்வுகளை மதித்து, நியாயத்தின்படி நடந்த அவர் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், இக்கொலையை மையமாக வைத்து மதவெறிச்செயல்களில் ஈடுபடுவோர் மீது, மதத்துவேசக் கருத்துகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

Published by
Venu

Recent Posts

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்! 

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

53 minutes ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

2 hours ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

4 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

4 hours ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

5 hours ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

5 hours ago