ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? திருமாவளவன் கொடுத்த பதில்!
அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில், விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னையில் நேற்று நடந்த அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில், தவெக தலைவர் விஜய், விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசியது அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், திமுக கூட்டணி கட்சியாக இருக்கும் விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா நேற்று திமுகவை நேரடியாக தாக்கி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் சொல்லியிருக்கிற கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு, கட்சி பொறுப்பல்ல. ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச சுதந்திரம் உண்டு. ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கிறது
தற்பொழுது, அவர் பேசியது விசிகவின் கருத்து இல்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்திருக்கிறார் என்றாலும் திமுகவினர் இதற்கு கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். இதனால், ஆதவ் அர்ஜூனாவிடம் விளக்கம் கேட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் சென்றுகொண்டிருந்த விசிக தலைவர் திருமாவளவனிடம் பத்திரிகையாளர்கள், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “திமுகவை ஆதவ் அர்ஜுனா விமர்சித்தது தவறு தான். ஆதவ் அர்ஜுனா பேசியது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் வி.சி.க கருத்தாக பார்க்கப்படும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது.
இது கூட்டணி மற்றும் கட்சி நலனுக்கு எதிராக இருப்பதாக, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து இருக்கிறார்கள். இதனால், அவர் பேசிய கருத்து குறித்து முக்கிய நிர்வாகிகள் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.