மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமா? அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!
மக்களுடைய நம்பிக்கைகளை பொறுத்தவரையில் ஒவ்வோருடைய நம்பிக்கை ஒவ்வொரு மாதிரி இருக்கும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்

சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையடுத்து, 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, புனித வெள்ளியையொட்டி கடந்த 18ம் தேதி அரசு விடுமுறை என்பதால், சட்டப்பேரவை கூடவில்லை. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சட்டப்பேரவைக்கும் விடுமுறை விடப்பட்டது.
இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், அதில் கலந்து கொண்ட திமுக எம்.எல்.ஏ எழில் மூட நம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமா? என் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு உடனடியாக பதில் சொன்ன சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ” மக்களுடைய நம்பிக்கைகளை பொறுத்தவரையில் ஒவ்வோருடைய நம்பிக்கை ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருவருக்கு மூட நம்பிக்கையாக இருக்கலாம்..இன்னொன்று சிலருக்கு மத நம்பிக்கை இருக்கலாம்.
எனவே, அரசியல் சட்டப்படி அவர்கள் அவர்களுடைய உரிமைகளை பார்த்து தான் பாதுகாக்க முடியுமே தவிர எந்த சட்டத்தின் மூலமும் கொண்டு வந்து தடுப்பதோ அல்லது ஒன்றை பாதுகாப்பதோ இயலாத ஒரு காரியமாக போய்விடும். எனவே நம்மளுடைய கொள்கைகளை நாம் பாதுகாப்பதில் பின்பற்றுவதில் தவறு கிடையாது. எனவே, இந்த விஷயத்தில் மற்றவர்களை கட்டாய படுத்துவது என்கிற முயற்சி ஏற்றுக்கொள்ள தக்கதாக இருக்குமா? என்பதை பார்த்து தான் சொல்லவேண்டும்” என பேசினார்.
அவர் பேசி முடித்த பிறகு சபாநாயகர் அப்பாவு டாக்டர் எழில் சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வியை கேட்டுவிட்டீர்கள் அதற்கு அமைச்சர் சரியான பதிலையும் கொடுத்திருக்கிறார் எனவும் சிரித்துக்கொண்டே அப்பாவு பேசினார்.