காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!
காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இது குறித்து சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி விளக்கமும் அளித்துள்ளார்.
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என மக்கள் கோரிக்கைகளை வைத்து வந்தனர். இதனையடுத்து, இன்று நடைபெற்ற 5-வது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதனை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் நடவடிக்கை எடுக்க கோரி பேசினார்கள்.
குறிப்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன் சட்டப்பேரவையில் பேசும்போது ” விளைநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல தமிழக அரசு அனுமதி வழங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு விளக்கம் தெரிவித்து பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி ” வனவிலங்குகள் எது என்கிற பட்டியலை மத்திய அரசு தான் வைத்திருக்கிறது. வனவிலங்கு பட்டியில் ஒரு விலங்காக காட்டுப்பன்றிகளும் இருக்கிறது. அந்த பட்டியலில் இருந்து அது நீக்கம் செய்யப்படுவது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் இல்லை. காட்டுப் பன்றிகளை சுட விவசாயிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யபப்டும்.
வனத்துறை அதிகாரிகள் காப்புக்காடுகளில் இருந்து 1 – 3 கி.மீ. தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால் சுட அனுமதி வழங்கப்படுகிறது. விளை நிலங்களை சேதப்படுத்தும் காப்பு காடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை காட்டு பன்றிகளை சுட அனுமதி இல்லை” எனவும் விளக்கமாக அமைச்சர் பொன்முடி பேசினார்.