கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன் என்று சீமான் கேள்வி.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் மூணாறு நிலச்சரிவு குறித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியுள்ளார் அதில் அவர் கூறுகையில், கேரள மாநிலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய 23 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 80 க்கும் மேற்பட்டோர் பெருமழை காரணமாக, கடந்த 7-ம் தேதி அன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் உறங்கிகொண்டிருந்தபோதே வீடுகளோடு புதையுண்டு அதில் பலரும் உயிரிழந்தனர்.
இன்னும் பலரது நிலை என்னவென்றே தெரியாமல் இருப்பதுதான் மிகுந்த துயரத்தையும், மன வேதனையையும் அளிக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட ராஜமலை பெட்டிமுடி மட்டுமின்றி இடுக்கி மாவட்டத்தில் உள்ள மக்களில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் தமிழர்கள்.
இதே கேரள மாநிலத்தில், கடந்த 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த மிகவும் கொடுமையான துயர நிகழ்விற்கு நம்முடைய ஆறுதலையும் தெரிவித்து இருந்தோம். விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பலரது உயிரை காப்பற்றியதை வரவேற்கிறேன். ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு மற்றும் மத்திய அரசுகள் கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.
கேரள முதல்வர், விமான விபத்திற்கு அமைச்சர் தலைமையில் மீட்பு குழு ஒன்றை அமைக்கிறார். இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கேரள முதல்வருடன் தொடர்புகொண்டு மீட்புபணிகள் விரைந்து நடைபெறுவதை உறுதி செய்ததுடன் தேவையான உதவிகள் புரிய மத்திய பேரிடர் மீட்பு படையையும் உடனடியாக அனுப்பி மீட்புப் பணியைத் துரிதப்படுத்தினர்.
மத்திய அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால் அதே வேளையில் அதைவிட அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த துயர நிகழ்வில் சிக்குண்டவர்களை மீட்க இத்தகைய வேகத்துடன் மத்திய-மாநில அரசுகள் செயல்படவில்லையோ என்ற ஐயம் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளது. விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை கேரள முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். ஆனால், மூணாறில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழர்களைப் பார்க்க யாரும் செல்லவில்லை.
மத்திய பாஜக அரசு தமிழர்கள் பாதிக்கப்படும்போது பாரா முகத்துடன் நடந்துகொள்வது புதிதல்ல; வெள்ளம், மழை, புயல் என்று தமிழர்கள் எத்தகைய துயர துன்பத்திற்கு ஆளானாலும் அலட்சிய போக்குடன் நடந்துகொள்வது வாடிக்கையானதே ஆனால் சமத்துவம், சகோதரத்துவம் என்று பேசக்கூடிய பொதுவுடைமை கட்சியினைச் சார்ந்த கேரள முதலமைச்சர் ஐயா பினராயி விஜயனின் ஆட்சியிலும் அதே போல் நிகழ்கிறதோ என்ற சந்தேகம் வருவதைத் தடுக்கமுடியவில்லை.
எனவே மத்திய-மாநில அரசுகள்:
1. தமிழர்களுக்கு எழுந்துள்ள ஐயங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இனியும் இடங்கொடுக்காமல் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. நிலச்சரிவில் சிக்குண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அதிகபட்ச இழப்பீட்டையும் உரிய துயர் துடைப்பு உதவிகளையும் வழங்க வேண்டும்.
3.இறந்தவர்களின் உடல்களை முறையாக நல்லடக்கம் செய்ய அவர்களது உறவினர்களிடம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்க தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. வீடு உட்பட அனைத்து உடைமைகளையும், உறவுகளையும் இழந்து கையறு நிலையில் நிற்பவர்களுக்கு உடனடியாக மறுவாழ்விற்கான நிரந்தர மாற்று ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும்.
5. அதிக வேலை வாங்குவதற்காகத் தேயிலை தோட்டம் அமைந்துள்ள மலைச்சரிவுகளிலேயே தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற முறையில் குடியிருப்புகளை அமைத்து தந்துள்ள தேயிலை தோட்ட நிர்வாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, உடனடியாகப் பாதுகாப்பான மாற்று குடியிருப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் தமிழக அரசு, மூணாறு தேயிலைத் தோட்ட நிலச்சரிவு மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளில் கேரள மற்றும் மத்திய அரசுகளோடு தொடர்புகொண்டு அவர்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், உடனடியாகத் தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும் எனவும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உடனடியாகத் தமிழக அரசு தனி அமைச்சகத்தை அமைக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…