தமிழக வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்.? தேர்தல் ஆணையர் விளக்கம்.!

Election 2024 Tamilnadu - Satyapratha Sahoo

Election2024 : தேர்தல் அலுவலர்கள் சிலர் சரியாக வாக்குப்பதிவு விவரங்களை தெரிவிக்காத காரணத்தாலே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதி 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் வெளியான வாக்குப்பதிவு சதவீத குளறுபடி தற்போது வரையில் பேசுபொருளாக உள்ளது.

தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றாலும், 6 மணிக்குள் வாக்குசாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு இரவு 8 மணியை கடந்தும் தேர்தல் நடைபெற்றது. இதனால் துல்லியமான வாக்குசதவீத விவரங்கள் வெளியாகாத சமயத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யப்பிரதா சாகு செய்தியாளர்களிடம் தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறினார்.

ஆனால், அதனை தொடர்ந்து மறுநாள் (ஏப்ரல் 20)ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, 69.46 சதவீத வாக்குக்களே தமிழகத்தில் பதிவானதாக அறிவித்தது. தேர்தல் ஆணையர் கூறியதற்கும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டதற்கும் 2.63 சதவீதம் வித்தியாசம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து இன்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு கூறுகையில், வாக்குப்பதிவு சமயத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் தேர்தல் ஆணைய செயலியில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவிட வேண்டும். ஆனால் சில தேர்தல் அலுவலர்கள் முறையாக வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவிடவில்லை. இது அதிகாரபூர்வ உத்தரவு இல்லை என்பதால் சிலர் இதனை பின்பற்றவில்லை.

அந்த தகவலின்படி வாக்கு சதவீதம் கூறப்பட்டதால் சிறிய வேறுபாடு எழுந்துள்ளது. இறுதியாக மாவட்ட தேர்தல் அலுவலர் கையெழுத்திட்டு வரும் வாக்குப்பதிவு சதவீதமே உறுதியான வாக்குப்பதிவு சதவீதம் ஆகும். அதன்படி தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்