சூலூரில் ஏன் தேர்தலை தள்ளிவைக்க கூடாது-கமல்ஹாசன் கேள்வி
சூலூரில் ஏன் தேர்தலை தள்ளிவைக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.
திருப்பரங்குன்றம்,சூலூர்,அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் தான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.மேலும் கமல்ஹாசன் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதனால் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் அவர் பேசிவிட்டு கீழிறங்கும் போது காலணி வீசப்பட்டது.மேலும் நாதுராம் கோட்ஸே குறித்த கருத்து தொடர்பாக சூலூரில் இன்று கமல் பிரச்சாரம் மேற்க்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், பரப்புரை மேற்க்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதில் அரசியல் உள்ளது. அப்படி பதற்றமான சூழல் இருந்தால் சூலூரில் ஏன் தேர்தலை தள்ளிவைக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.
இவரது இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் திருப்பரங்குன்றம்,சூலூர்,அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.