‘இந்த’ ஒரு காரணத்திற்காக தான் துணை முதல்வரானார் உதயநிதி.! ரகசியம் உடைத்த திமுக.!
திமுகவின் அடுத்த தலைமை யார் என இளைஞர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை : 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்த சமயத்தில் துணை முதலமைச்சராக அப்போது அமைச்சர் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும், கலைஞர் உடல்நிலை , வயது மூப்பு ஆகியவை கருத்தில் கொண்டு கட்சி மற்றும் நிர்வாக பணிகளுக்காக இந்த பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்த போதும் அதேபோல விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கட்சிப்பணிகளையும், ஆட்சி பணிகளையும் செய்து வரும் வேளையில் , 3ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநிதி அனுபவம் கொண்ட உதயநிதிக்கு திடீரென துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்தன.
Read more – விஜய்க்கு எதிராக களமிறக்கப்பட்டாரா உதயநிதி.? 2026இல் யாருக்கு சாதகம்.? யாருக்கு பாதகம்.?
இந்த கேள்விகளுக்கு அவ்வப்போது திமுக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உதயநிதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாலும், திமுக தரப்பில் இருந்து பதில் வராமல் இருந்து வந்தது. இந்நிலையில் , நேற்று இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ” தந்தை பெரியாருக்கு துணையாக அறிஞர் அண்ணா இருந்தார். அறிஞர் அண்ணாவுக்கு துணையாக கலைஞர் கருணாநிதி இருந்தார். அடுத்ததாக , கலைஞர் கருணாநிதிக்கு துணையாக மு.க.ஸ்டாலின் இருந்தார். அதேபோல தான் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணையாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.
ஒரு கட்சி இப்படி இருந்தால் தான் சிறப்பாக இருக்கும். அடுத்து வரும் தலைமுறையிலும் அக்கட்சி வளரும். ஒரு கட்சி அடுத்த தலைமுறை (தலைவரை) அடையாளம் காட்ட வேண்டும். தலைவருக்கு அடுத்து யார் என்பதை காட்ட வேண்டும். அப்படி செய்யாததால் தான் அதிமுக இப்போது நான்கு துண்டுகளாகக் கிடக்கிறது.” என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
இதன் மூலம் திமுகவின் அடுத்த தலைமுறை தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் என்பதை ஆர்.எஸ்.பாரதி மறைமுகமாக பதிவிட்டுள்ளார் என்றும், இளம் தலைமுறைக்கு முக்கிய பொறுப்பு அளிப்பதன் மூலம் திமுக இளம் தலைமுறை தொண்டர்கள் வேறு எங்கும் திசை திரும்பாமல் இருப்பார்கள் என்றும்அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.