தமிழக அரசு அமைதி காப்பது ஏன்? – சீமான் ஆவேசம்

Default Image

தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்? என சீமான் அறிக்கை.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்பெண்ணையாற்றின் துணையாறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை என்ற பெயரில் மதகுகளின்றி மிகப்பெரிய அணையைக் கட்டி முடித்துள்ள கர்நாடக அரசுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது.

தடுப்பணை அமைப்புக்குச் சிறிதும் தொடர்பில்லாத வகையில் 162 அடி உயரத்தில் ஒரு சொட்டு தண்ணீர்கூட வெளியேறாதபடி மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட அணையால் வடதமிழகமே பாலைவனமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் தமிழக அரசு அமைதி சாதிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களின் வழியாக 320 கி.மீ. தூரம் பாய்ந்து, 40,000 ஏக்கர் விளை நிலங்களின் பாசனத்தேவையையும், குடிநீர்த்தேவையையும் நிறைவுசெய்வது தென்பெண்ணையாறாகும்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் யார்கோள் என்னுமிடத்தில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே கடந்த 2014ம் ஆண்டு, தடுப்பணை கட்டத் தொடங்கியது கர்நாடக அரசு. பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த முந்தைய அதிமுக அரசு, அதுகுறித்துப் பெரிதாகக் கவலைகொள்ளாது அலட்சியமாகவிட்டதன் விளைவாகவே இன்றைக்கு நதிநீர் உரிமையே பறிபோகிற இழிநிலையில் நிற்கிறோம்.

மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்து இணக்கமாக இருந்தபோதிலும் தமிழகத்திற்கான நதிநீர் உரிமையை நிலைநாட்ட சட்டப்போராட்டமும், அரசியல் நெருக்கடியும் கொடுக்காது வேடிக்கைப் பார்த்து நின்ற அதிமுக அரசின் மோசமான செயல்பாடே இவ்வளவு கொடிய சூழலுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

புதிதாக திமுக அரசு பொறுப்பேற்றப் பிறகும்கூட அதே நிலை நீடிக்கிறது. தமிழக நீர்வளத்துறையமைச்சர் டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத் துறையமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசு அணை கட்டியது குறித்து எவ்விதக் கண்டனமோ, நடுவர்மன்றம் அமைப்பது குறித்து எவ்வித நடவடிக்கை இல்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமின்றி, தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியையும் வெளிக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

ஆகவே, தமிழகத்தைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இனியாவது விழிப்புடன் செயல்பட்டு, அத்துமீறிக் கட்டுப்பட்டுள்ள அணை குறித்தும், தென்பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாகவும் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.

தென்பெண்ணையாற்று அணைபோல அலட்சியமாக இருந்துவிடாமல் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட முயற்சிக்கும் மேகதாது அணையை எவ்வித சமரசமுமின்றிச் சட்டப்போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தி தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்