யார் அந்த சார் என்று கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது! எடப்பாடி பழனிசாமி கேள்வி?
ஆளுநர், உரையை புறக்கணித்துச் செல்லவில்லை எனவும் திட்டமிட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து திடீரென வெளியேறினார். சட்டப்பேரவையில் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காமல் இருந்த ஆளுநர் ரவி, இம்முறை அதே காரணத்தைக் கூறி அவையில் இருந்தே வெளியேறினார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் ஆளுநர் உரையாற்றாமல் சென்றது முதல் அதிமுக நடத்தி வரும் போராட்டம் வரை பல விஷயங்களை பேசிவிட்டு சென்றார். இது குறித்து அவர் பேசியதாவது ” கஞ்சா போதையால் தமிழகத்தில் பல இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த கஞ்சா போதையால் தான் பெண்கள், வயதான பாட்டிகள் கூட பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆட்சியில் தான் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடக்கிறது. இது மிகவும் கேவலமான ஒரு விஷயம்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ” இன்றயை சட்டப்பேரவை உரை ஆளுநர் உரையாக இல்லாமல் சபாநாயகர் உரையாக மாறிவிட்டது. அதுவும் காற்றடைத்த பலூன் போல் உள்ளது. இந்த உரையில் திமுக சுய விளம்பரம் தேடிக்கொண்டதை தவிற வேறு எதுவும் இல்லை.
சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியே போகவில்லை, திட்டமிட்டு ஒரு நோக்கத்தோடு செயல்பட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே திமுக ஆட்சியில் தான் ஆளுநர் உரையை சபாநாயகரே வாசிக்கிறார்; ஆளுநர் உரையில் எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லை.
நாங்கள் வேண்டும் என்றே அரசு கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று பதாகையை தூக்கி கொண்டு போராடவில்லை. இனிமேலும் இந்த அரசு தூங்கக்கூடாது என்பதற்காக தான் போராட்டம் நடத்துகிறோம். பல்கலைகழக விவகாரத்தில் யார் அந்த சார் அதனை கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது. யார் அந்த சார் என்று கேட்டால் மாற்றி மாற்றி அமைச்சர்கள் அறிக்கைகளை விட்டு கொண்டு இருக்கிறார்கள். சம்பவத்தில் யாரெல்லாம் குற்றவாளியோ அவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுப்பது தான் அரசின் கடமை” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.