முதல்வருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன்? – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேட்டி!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்தார். 36 இஸ்லாமிய கைதிகள் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுவதாக பேரவையில் இபிஎஸ் பேசினார். இந்த தீர்மானத்திற்கு ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனை செல்வன், சின்னத்துரை, ராமச்சந்திரன், ஜி.கே.மணி , ஜெகன் மூர்த்தி, பூமிதான் ஆகிய எம்எல்ஏக்கள் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் 39 இஸ்லாமியர்கள் விடுதலை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. உள்ளபடியே இஸ்லாமியர்கள் மீது அக்கறை இருந்தால் ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுக்க அதிமுக தயாரா? என பல்வேறு கேள்வி எழுப்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார். கைதிகள் விடுதலை தொடர்பான காரசார விவாதத்தினை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதாவது, இஸ்லாமிய கைதிகள் விடுதலை விவகாரத்தில் முதலமைச்சர் – இபிஎஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் சட்டப்பேரவையில் தொடர்ந்து பேச வாய்ப்பு அளிக்கவில்லை என கூறி அதிமுக வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 36 இஸ்லாமியர்கள் சிறையில் வாடி வருகின்றனர். பல இஸ்லாமிய அமைப்புகள் 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய என்னிடம் கோரிக்கை வைத்தன.
அந்த அடிப்படையில் இன்று கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன். முதலமைச்சர் பதில் அளிக்கும்போது இதற்கான பதில் அளித்திருந்தால் பிரச்னை இல்லை. இஸ்லாமியர்கள் மீது என்ன அக்கரை என கேட்டதோடு, அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்றார். இதற்காகத் தான் எனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது, அதனால் வெளிநடப்பு செய்துள்ளோம்.
சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதிமுக எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருந்துள்ளது. சிறுபான்மையினர்கள் இன்று எங்களை சந்திப்பது திமுகவிற்கு கோபம் ஏற்படுத்துகிறது. இஸ்லாமியர்கள் குறித்து அதிமுக பேசினால் முதல்வருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன் என கேள்வி எழுப்பி விமர்சித்தார். மேலும், இஸ்லாமியர்களுக்கு பல்வேறு நன்மைகள் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது. 1996 திமுக ஆட்சியில் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது என குற்றசாட்டியுள்ளார்.