தடை செய்யப்பட்ட பட்டாசுகளை ஏன் தயாரிக்கிறீர்கள்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

Default Image

உச்சநீதிமன்ற தடையை மீறி தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் வெடிக்கப்படுகின்றனவா என நீதிபதிகள் கேள்வி.

தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை எதற்காக தயாரிக்கிறீர்கள் என்று பட்டாசு ஆலைகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பெரிய சரவெடிகள் தடை செய்யப்பட்டும் அவை வெடிக்கப்படுவதை பார்க்கிறோம் என்றும் அரசியல் கட்சிகளின் வெற்றி கூட்டங்கள், திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் மத நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கின்றன எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உச்சநீதிமன்ற தடையை மீறி தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் வெடிக்கப்படுகின்றனவா என்பதை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. சரவெடி தயாரிப்பதில்லை, சின்ன சின்ன பட்டாசுகளை வாங்கி இணைத்து விடுகிறார்கள் என்று உற்பத்தியாளர் சங்கம் கூறியுள்ளது.

300 வகையான பட்டாசுகள் விற்கப்படும் நிலையில், 5 மட்டுமே பசுமை பட்டாசுகள் என மனுதாரர் தரப்பில் தகவல் கூறப்பட்டது. மனுதாரர்கள் தாக்கல் செய்த விவரங்களை பார்த்தால் விதிமீறல் ஏற்படுகிறது என்பதை பார்க்க முடிகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கப்படுவதை தடுக்காமல் இருக்கும் காவல் ஆணையர் பொறுப்பேற்கவேண்டும் என கூறி, பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி தற்போது வரை தீபாவளிக்கு காலை 1 மணி நேரமும், மாலை 1 மணிநேரமும் நிபந்தனையுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என நீட்டித்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்