டிவிவி தினகரன் குடும்பத்தினர் மது ஆலைகளை மூடாதது ஏன்? : அமைச்சர் தங்கமணி கேள்வி..!
படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்த உடனேயே டிவிவி தினகரன் குடும்பத்தினர் மது ஆலைகளை மூட வேண்டியதுதானே என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறிவிட்டு, கடந்த மே மாதம் 810 கடைகளை திறக்க அரசாணை வெளியிட்டது சரியா என்று பேரவையில் தினகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல படிப்படியாக மதுவிலக்கு என அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 1000 மதுக்கடைகள் மூடப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
படிப்படியாகத்தான் மதுக்கடைகளை குறைக்க முடியும் என்று கூறிய அமைச்சர் தங்கமணி, நீதிமன்ற உத்தரவின்பேரில் கடைகள் மூடப்பட்டதையும் குறிப்பிட்டார். தற்போது 3 ஆயிரத்து 866 கடைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மதுபான உற்பத்தியில் 25 சதவீதம் யாருடைய குடும்பத்தை சார்ந்தது என கேள்வி எழுப்பிய அமைச்சர் தங்கமணி, ஜெயலலிதா வழியில் உள்ளவர்கள் என்றால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற உடன் சாரய ஆலைகளை முட வேண்டியது தானே என்றும் வினவினார்.
அப்போது டிடிவி தினகரன் பெயரைக் குறிப்பிடாமல் உங்கள் குடும்பத்தினர் என அமைச்சர் குறிப்பிட்டார். வருமானம் வர வேண்டும் என்பதால் இது போன்ற கருத்துகள் தெரிவிக்கப்படுவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். மேலும் தனது குடும்பத்தினர் மது ஆலைகள் நடத்தவில்லை என்றும், உறவினர்கள் நடத்துவதற்கான தான் எப்படி பொறுப்பாக முடியும் என்றும் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.