பெரியார் பற்றி சீமான் சர்ச்சை பேச்சு : அதிமுக ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை கேள்வி!
அதிமுக பெரியாரை ஏற்கவில்லையா என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். அதிலும், தந்தை பெரியார் உடல் இச்சை பற்றி கூறியதாக சீமான் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்வினைகளை உண்டாக்கியுள்ளது.
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது புகார்கள் பதிப்பட்டு வருகின்றன. அதே சமயம், சீமான் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” சீமான் பேசியதற்கு ஏன் அதிமுக கண்டனம் தெரிவிக்கவில்லை. அதிமுக பெரியாரை ஏற்கவில்லையா? எம்ஜிஆர் இந்த கட்சியை ஆரம்பிக்கும்போது தந்தை பெரியார் என்னுடைய தலைவர் என்று ஏற்றுக்கொண்டவர்.
அறிஞர் அண்ணா திமுக என்றால் அண்ணாவுக்கு பிதாமகன் குரு என்றாலே பெரியார் தான். இப்போது ஏன் பெரியாரை விமர்சனம் செய்யும்போது அதிமுக அமைதியாக இருக்கிறார்கள்? பாஜக நிச்சியமாக கண்டிக்க மாட்டார்கள் ஏனென்றால், சீமான் பாஜக கட்சியின் ஊதுகுழலாக செயல்படுகிறார். பாஜகவால் பேசமுடியாதவையை சீமானை வைத்து பேச வைத்து வருகிறது. பெரியார் என்பவர் இந்த தேசத்துடைய சொத்து.
நடைபெறவுள்ள ஈரோடு சட்டமன்ற தேர்தலை பாஜக மற்றும் அதிமுக புறக்கணித்துள்ளது என்பது ஏன் என்று தெரியவில்லை. 2026 சட்டசபை தேர்தலை கணக்கீடு செய்து அதிமுக மற்றும் பாஜக செயல்படலாம் என்று நான் நினைக்கிறேன். ஈரோட்டில் இடைத்தேர்தல் வருகிறது ஈரோட்டில் சிங்கம் என்றால் பெரியார் தான் அங்கு பெரியாரை விமர்சனம் செய்துவிட்டு சீமான் எப்படி வாக்கு கேட்க முடியும் ? வரும் எதிர்வினைகளை கண்டிப்பாக அவர் சந்தித்து தான் ஆகவேண்டும்” எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.