பேரறிவாளனின் தாயார் அனுப்பிய மனுவை சிறைத்துறைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி
பேரறிவாளனின் தாயார் அனுப்பிய மனுவை சிறைத்துறைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது ஏன்?
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் உள்ள நிலையில், அவர் தஹ்ரபோது உடல்நிலை சரியில்லாத நிலையில் காணப்படுகிறார். அவரது தாயார் அற்புதம்மாள், அவருக்கு விடுப்பு வழங்கக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார்.
ஆனால், இந்த மனு பரிசீலிக்கப்படாததால், ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் பிரபாவதி, ‘ மனுதாரர், பேரறிவாளனுக்கு விடுப்பு கேட்டு முதலில் அரசுக்கு தான் மனு அனுப்பினார். அந்த மனு சிறைத்துறை பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அரசுக்கு அந்த கோரிக்கை மனுவை திருப்பி அனுப்பியுள்ளதாக சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது.’ என தெரிவித்துள்ளார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அற்புதம்மாளின் மனு குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி பரிசீலிக்காமல், இந்த மனுவை சிறைத்துறைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.