பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் பற்றிய பகீர் தகவல்கள் காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த சமயத்தில் அந்த பகுதியில் வந்த 2 நபர்கள் அந்த மாணவனை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, உடனடியாக இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டது. விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு நபரை காவல்துறை அதிரடியாக கைதும் செய்தது. கைது செய்யப்பட்டவர் பெயர் ஞானசேகரன் (37) என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடம் தீவிரமான விசாரணை நடத்தியபோது அவரைப்பற்றிய சில பகீர் தகவல்களுக்கும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்படி, சென்னை கோட்டூர்புரத்தில் சாலையோரம் பிரியாணி வியாபாரம் செய்து வந்த ஞானசேகரன் இரவில் பிரியாணி விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழவளாகத்தில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்று அங்கு தனிமையில் பேசிக் கொண்டிருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து, போலீஸ் எனக்கூறி மிரட்டி, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
அது மட்டுமின்றி, ஞானசேகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற புகாரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதைப்போல, அவர் மீது திருட்டு, வழிப்பறி என 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதிர்ச்சியான தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும், இந்த வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நபரை தேடி வருகிறார்கள்.