இதயமாற்று அறுவை சிகிச்சை துறையின் ‘BIG DADDY’! யார் இந்த மருத்துவர் கே.எம்.செரியன்?

இதய அறுவை சிகிச்சையில் சர்வதேச அளவில் அறியப்பட்ட டாக்டர் செரியன் பெங்களூருவில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

KM Cherian

சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த செரியன்? 

மருத்துவர் கே.எம்.செரியன் 1942-ஆம் ஆண்டு கேரளா மாநிலம் காயம்குளத்தில் பிறந்தவர். அவர், மருத்துவப் படிப்பை முடித்த பின்னர், 1970-ஆம் ஆண்டில் வேலூர் சிஎம்சி (Christian Medical College) மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றினார். அதன்பிறகு, இதய அறுவை சிகிச்சை (Cardiac Surgery) துறையில் மேம்பாடு செய்ய பிரிட்டன் சென்றார்.

அங்கு எப்ஆர்ஏசிஎஸ் (FRCS) படிப்பினை பின்பற்றியதும், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவப் பயிற்சிகளை மேற்கொண்டு, உலகத்தரத்தில் மிகவும் திறமையான இதய அறுவை சிகிச்சை வல்லுநராக உருவெடுத்தார்.

முதல்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை

படித்து முடித்த பிறகு, இந்தியாவில் முதல்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் இவர் தான். 26 வயதினிலேயே, ஆஸ்திரேலியாவில் திறந்த நிலை அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, அவரின் திறமை சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது. அதன்படி, 1975 ஆம் ஆண்டு, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் இந்தியாவின் முதல் இதய பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டார். இதன் மூலம் தான் இவருடைய பெயர் உலகம் முழுவதும் அறியப்பட்டு  இதயமாற்று அறுவை சிகிச்சை துறையின் ‘BIG DADDY’ என அழைத்தனர்.

மறைவு 

82 வயதான மருத்துவர் கே.எம்.செரியனின் சமீபத்தில் பெங்களூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டிருந்தபோது, ​​திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருடைய இறுதிச் சடங்குகள் வரும் 30-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி இரங்கல் 

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கே.எம். செரியனின் மறைவால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இருதய மருத்துவத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் மகத்தானது, பல உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், எதிர்கால மருத்துவர்களுக்கு வழிகாட்டவும் உதவும். தொழில்நுட்பம் மற்றும் புதுமை மீதான அவரது முக்கியத்துவம் எப்போதும் தனித்து நிற்கிறது. இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன” என சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.

முகஸ்டாலின்

முதல்வர் மு.க. ஸ்டாலின் ” ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியும், இதய அறுவை சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்றவருமான டாக்டர் கே.எம்.செரியனின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதயப் பராமரிப்பில் அவரது முன்னோடிப் பணி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது மற்றும் மருத்துவத் துறையில் பலருக்கு உத்வேகம் அளித்தது. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள். அவரது பங்களிப்புகள் மருத்துவத்தில் சிறந்து விளங்க தொடர்ந்து ஊக்கமளிக்கும்”  எனவும் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்