அடுத்த முதல்வர் யார்? நாளை வாக்கு எண்ணிக்கை – என்னென்ன கட்டுப்பாடுகள், முன்னேற்பாடுகள்?

Default Image

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் 71.79% வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேறப்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 71.79 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை கடுமையாக விதித்துள்ளது. கொரோனா வழிகாட்டுதலின்படி, வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் தொடர்புடைய பணியாளர்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்கள், 48 மணிநேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று அல்லது இருமுறை தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அதேபோல், உடல்வெப்ப பரிசோதனையின் போது 98.6 க்கும் அதிகமாக இருந்தால் அந்த நபர் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார். மேலும் வாக்கு எண்ணிக்கை அன்று முழு முடக்கம் என்பதால் வெற்றி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு முன்னரும், பின்னரும் எந்தவித கொண்டாட்டங்களும் கூடாது, ஊர்வலம் செல்வது மற்றும் பட்டாசு வெடிப்பது போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தை போலவே புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் மாநிலங்களிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுகவின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி, திமுகவின் சார்பில் மு.க.ஸ்டாலின் அமமுக சார்பில் டி.டி.வி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு களமிறங்கினர்.

இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான இடத்தை பிடித்து வெற்றி பெரும் என்றும் அதிமுக கூட்டணி குறைந்த இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனவும் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர். இதனால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
selvaperunthagai
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack
Tamilnadu CM MK Stalin
tn rain