தமிழ்நாடு பாஜக ‘புதிய’ தலைவர் யார்? பிரதமர் அருகில் கடைசி நேர இருக்கை ஒதுக்கீடு?
நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த மேடையில் நயினார் நாகேந்திரனுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அவர் பாஜக தமிழக தலைவராக நியமனம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில் தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரை பாஜக தேசியத் தலைமை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல அடுத்தடுத்தடுத்த நகர்வுகள் இருக்கிறது.
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகும் பட்சத்தில், ஏற்கனவே அதிமுக தலைவர்களுடன் உரசலில் ஈடுப்பட்டுள்ள அண்ணாமலையை மாற்றக்கோரி அதிமுக மூத்த நிர்வாகிகள் பாஜக தேசிய தலைமைக்கு கோரிக்கை வைத்ததாக செய்திகள் உலா வருகின்றன.
டெல்லி விசிட்
இதனால், 2026 தேர்தலை கணக்கில் கொண்டு பாஜக மாநிலத் தலைவரை மாற்றிவிட்டு அண்ணாமலைக்கு வேறு பொறுப்பு வழங்கவும் பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த யூகங்களுக்கு மத்தியில் இபிஎஸ், செங்கோட்டையன், அண்ணாமலை என தமிழக அரசியல் தலைவர்கள் டெல்லிக்கு விசிட் அடித்து தமிழகம் திரும்பியுள்ளனர்.
ரேஸில் நான் இல்லை
அண்ணாமலை மாற்றம்ப்படும் பட்சத்தில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவராக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த வாரம் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூட நான் தமிழ்நாடு பாஜக தலைவர் ரேஸில் இல்லை எனவும், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு விரிவாக பேசுகிறேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் மாற்றம் உறுதி என்றே கூறப்பட்டது.
பிரதமர் மேடையில் நயினார் நாகேந்திரன்
நேற்று, பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்தார். அப்போது மேடையில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த வரிசையில் முதலில் நயினார் நாகேந்திரன் அமரவைக்கப்படவில்லை. அதன் பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு நயினார் நாகேந்திரனுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டது என செய்திகள் வெளியாகின. அந்த விழா மேடையில் பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு , பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். மேடையின் கீழே தான் அண்ணாமலைக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது குறிப்பிடப்பிடதக்கது.
விடை தெரியா வினா?
இதனால், அடுத்த பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்ப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இப்படியான சூழலில் அண்ணாமலை நேற்று கூறுகையில், அது அரசு விழா என்பதால் மக்கள் பிரதிநிதிகள் மட்டும் மேடையில் இருந்தனர் என விளக்கம் அளித்துள்ளார். இதனால், பாஜக புதிய மாநில தலைவர் குறித்த வினாவுக்கு விடை இன்னும் நீண்டே இருக்கிறது.